செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொட்டபெட்டா மலை உச்சியில் செஸ் போட்டிகள்-மாணவர்களுடன் அமைச்சர் விளையாடினார்

ஊட்டி : சென்னையில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொட்டபெட்டா மலை உச்சியில் மாணவர்கள் செஸ் விளையாடி அசத்தினர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை (28ம் தேதி) துவங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை சென்னை அருகேயுள்ள மகாபலிபுரத்தில் நடக்கிறது. இதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமை செயலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த லோகோ மற்றும் சின்னம் ஆகியவைகளை அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், வெற்றி பெற்ற மாணவர்களை சென்னையில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிகளை காண அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்நிலையில், இப்போட்டிகள் குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 மீட்டர் உயரம் கொண்ட தொட்ட பெட்டா மலையில் நேற்று பள்ளி மாணவர்களிடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்து மாணவர்களுடன் செஸ் விளையாடினார். தொட்டபெட்டாவில் நடந்த  செஸ் போட்டிகளை சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்தனர். சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நகராட்சி தலைவர் வாணீஷ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஜார்ஜ், எல்க்ஹில் ரவி, முஸ்தபா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: