ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் 3வது நாளாக பற்றி எரிந்த ‘தீ’-மணலை கொட்டி அணைக்கும் பணி தீவிரம்

நெல்லை : ராமையன்பட்டியில்  உள்ள நெல்லை மாநகராட்சி குப்பைக்கிடங்கில் 3வது நாளாக தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் தீயை  கட்டுப்படுத்தும்  பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ பரவால் தடுக்க குழிகள் தோண்டி குப்பைகளை அதில் போட்டு மணலை கொட்டி அணைக்கும் பணியும் நடக்கிறது.

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், ராமையன்பட்டியில் 150 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இதில் 32.5 ஏக்கரில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு இயங்கி வருகிறது. நெல்லை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் அள்ளப்படும் 110 டன் குப்பைகள் தினமும் அங்கு கொட்டப்பட்டு வந்தன.இந்நிலையில் மாநகர பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்குப்பைக்கிடங்குகளால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் அளவு ஓரளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும் குப்பைகள் அங்கு மலைபோல் குவிந்துள்ளது.

ஆடி மாத காற்றில் ஆண்டுதோறும் ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிவது வழக்கம். இந்தாண்டும் கடந்த 22ம் தேதி இங்குள்ள குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குப்பைகள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா மற்றும் பாளை, பேட்டை தீயணைப்பு குழுவினர் சம்பவ இடம் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி குடிநீர் வாகனங்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன. ஒருபகுதியில் ஓரளவு தீ கட்டுக்குள் வந்தாலும் தொடர்ந்து காற்று வீசுவதால் நேற்று முன்தினம் 2ம் நாளாக தீப்பற்றி எரிந்தது.

புகைமூட்டமும் அதிகமாக இருந்தது. இதையடுத்து பாளை, பேட்டை, கங்கைகொண்டான், நாங்குநேரி, சேரன்மகாதேவி ஆகிய 5 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து முகாமிட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்களோடு மாநகராட்சியினரும் குடிநீர் வாகன உதவியுடன் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வெண்புகை மூட்டம் வெளியேறுவதால் சங்கரன்கோயில் சாலையில் இப்பகுதியை கடக்கும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ெமதுவாக சென்றன.

மேலும் இப்பகுதிகளில் குடியிருப்புகளில் உள்ளவர்கள் நச்சுப்புகை தொடர்வதால் அவதிக்கு உள்ளாகினர். மேலும் மேடாக்கப்பட்ட குப்பைக்கிடங்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான சோலார் பேனல்களில் கடும் வெப்பம் மற்றும் புகை சாம்பல் படிந்தது.  இந்நிலையில் 3ம் நாளான நேற்றும் காற்று பலமாக வீசியதால் குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் வாகன உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் ஜேசிபி மூலம் குப்பைகளை குழிவெட்டி மணலை கொட்டி அணைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.

Related Stories: