காஞ்சிபுரத்தில் சிறுமழைக்கே சாலையில் தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று அதிகாலை பெய்த சிறுமழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரத்தில் சில தினங்களாக சாரல் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வந்தவாசி, செய்யாறு செல்லும் மேல்சாலை, உத்திரமேரூர் செல்லும் கீழ்சாலை இரண்டும் சந்திக்கும் பகுதியான மேட்டுத்தெரு பகுதியில் சாலையில் அடிக்கடி மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரண்டு பிரதான சாலைகள் சந்திக்கும் பகுதியான இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும்.

இந்நிலையில் சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதேபோன்று, காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் சாலையில் கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கி சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காஞ்சிபுரம் ஓரிக்கை, பேராசிரியர் நகர், ஜெம் நகர், மாமல்லன் நகர் பின்புறம் உள்ள மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் உள்ள மெகா பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: