2 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தணி முருகன் கோயிலில் பரணி கிருத்திகை கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்..!!

திருவள்ளூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பரணி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று அஸ்வினி உடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சரவண பொய்கை, நல்லாங்குளம் ஆகிய திருகுளங்களில் நீராடிய பக்தர்கள், மொட்டை அடித்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதால் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாராபதியில் 190வது வைகுண்ட ஆண்டு ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது.

Related Stories: