வாகேரி பகுதியில் அட்டகாசம் செய்த பெண் புலி கூண்டில் சிக்கியது; பொதுமக்கள் நிம்மதி

கூடலூர்: கேரள மாநிலம், சுல்தான் பத்தேரி அருகே கால்நடைகளை கொன்று, அட்டகாசம் செய்த 12 வயதான பெண் புலி கூண்டில் சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம், பத்தேரி தாலுக்கா, வாகேரி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புலி ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டது. அப்பகுதியில் கால்நடைகள், வளர்ப்பு நாய்கள் போன்றவற்றை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இதையடுத்து, இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வன அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இங்குள்ள ஏதன்வாலி தனியார் எஸ்டேட்டில் புலியின் நடமாட்டத்தை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் புலி கூண்டில் சிக்கியது. தொடர்ந்து, வனத்துறை மருத்துவ குழுவினர் பெண் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அருகில் உள்ள குப்பாடி வன உயிரின சிகிச்சை மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், கூண்டில் சிக்கியது 12 வயது பெண் புலி என்றும், புலியின் உடலில் காயங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தும் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும் அல்லது வனப்பகுதியில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, கால்நடைகளை கொன்று, அட்டகாசம் செய்து வந்த பெண் புலி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: