நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் எளிய முறையில் தவணைகளை செலுத்த ‘நம்ம குடியிருப்பு செயலி’ அறிமுகம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள்  வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தவணைகளை எளிய முறையில் செலுத்த நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகப்படுத்தினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

அதில், வாரியத்திற்கு சுலபமாக பணம் செலுத்தும் வகையில் நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார். கூட்டத்தில்,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  செயலாளர் ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்த வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணை தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை,  நிலுவைத் தொகை போன்றவற்றை செலுத்தலாம்.www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில்  வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை கியூஆர் கோடு மூலமாகவும்  செலுத்தலாம்.

நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணத்தை அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது. குடியிருப்போர் நலச்சங்கம் பதிவு செயப்பட்ட பிறகு அதனுடைய வங்கி கணக்கில் 3 மாதத்திற்கான இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.  குடியிருப்புகள் சம்பந்தமான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 84 சமுதாய பங்களிப்பு உதவியாளர்  பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

Related Stories: