தோகைமலை பகுதிகளில் சூரியகாந்தி பூ சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் இந்த ஆண்டு கணிசமாக பருவமழை பெய்ததால் பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தனர்.

சாகுபடி செய்த சம்பா நெல்பயிர்களை அறுவடை செய்த பின்பு சூரியகாந்தி சாகுபடியை தொடங்கினர். இதேபோல் பெரும்பாலான கிணற்று பாசன விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்து உள்ளனர். சூரியகாந்தி பூ சாகுபடிக்கு சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பட்டத்திற்கு உகந்தது என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் பருவ மழை மாறிமாறி பெய்ந்து வருவதால் அதற்கு ஏற்றார்போல் விவசாயிகளும் பட்டத்தை மாற்றி சாகுபடிகள் செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடலை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக சூரியகாந்தி பூ தெளிக்கப்பட்டு சாகுபடி செய்து வந்தனர். இந்த நடைமுறை காலப்போக்கில் முழு சாகுபடியாக சூரியகாந்தி பூ சாகுபடியை செய்து வருகின்றனர். 105 நாட்களில் விளைச்சல் ஆகும் சூரியகாந்தி பூக்களின் விதை ஒரு ஏக்கருக்கு 3 கிலோ சூரியகாந்தி விதை தேவைப்படும் என்கின்றனர். தனியார் கடைகளில் 2 கிலோ கொண்ட ஒரு பாக்கெட்டை 1500 ரூபாய் வரை விலைக்கு விவசாயிகள் வாங்குவதாக கூறுகின்றனர்.

குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை வயலில் தண்ணீர் பாய்ச்சப்பட்டால் தான் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறுகின்றனர். சூரியகாந்தி செடிகளில் அழுகல், மஞ்சள் போன்ற நோய்களுக்கு தனியார் கடைகளின் மூலம் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் தெளித்து நோயை கட்டுப்படுத்துவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். அறுவடை செய்யப்படும் சூரியகாந்தியினை மணப்பாறை, ஈரோடு, சிவகிரி போன்ற பகுதிகளில் கிலோ ரூ.35 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நிர்ணயிக்கப்படாத விலைக்கு விற்பனையாகும் சூரியகாந்தி விதைகள், நல்ல மகசூல் என்றால் ஒரு ஏக்கருக்கு தலா 50 கிலோ கொண்ட 15 மூட்டை கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். தோகைமலை பகுதிகளில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள் அடுத்த மாதம் அறுவடைக்கு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.

Related Stories: