திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ரூ.3.75 கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூர் : திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 509 விலை கிடைத்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடியே 75 லட்சம் அளவில் ஏலம் நடைபெற்றது.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும், அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர். அதன்படி, நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும், சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பருத்தி பயிருக்கு கடந்தாண்டில் நல்ல விலை கிடைத்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இருமடங்கு அளவில் அதாவது 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த மாதம் 2ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 8வது வாரமாக விற்பனை கூடத்தின் செயலாளர் சரசு, கண்காணிப்பாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஏலம் நடைபெற்றது.

இதில் கும்பகோணம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து 4 ஆயிரத்து 5 குவிண்டால் அளவில் பருத்தியினை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 509ம், குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 9ம், சராசரியாக ரூ.9 ஆயிரத்து 259ம் விலை கிடைத்தாகவும், ஒரு நாளில் மட்டும் ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பில் ஏலம் நடைபெற்றுள்ளதாக விற்பனை கூடத்தின் செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: