சின்னாளபட்டி பாரதிநகரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்-உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி 2வது வார்டு பாரதிநகரில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்பதாலும், குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து இருப்பதாலும் கொசுக்கள் உற்பத்தி கூடமாக பாரதி நகர் மாறி வருகிறது. சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுக்கடி தொல்லையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பாரதிநகர் பிள்ளையார்கோவில் எதிர்புறம் உள்ள இரண்டு தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீரை மிதித்தபடிதான் வீட்டிற்கு செல்லவேண்டிய அவல நிலையில் மக்கள் உள்ளனர். மேலும் அருகில் உள்ள தம்பித்தோட்டம் குளத்தில் குப்பைக் கழிவுகளை குவித்து வருவதால் கொசுக்கள் மற்றும் ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தம்பித்தோட்டம் பள்ளிக்கு சொந்தமான காலி இடத்தில் குப்பைக் கழிவுகளை குவித்து வருவதால் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுபோல மருத்துவமனை பின்புறம் தனியார் காலியிடத்தில் திருநகர், திரு.வி.க.நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி கூடமாக அப்பகுதி மாறியுள்ளது. அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், தூய்மை பணி ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையிளரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் செய்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த  ஆசிரியர் ஜான்போஸ்கோ கூறுகையில், வீட்டின் பின்புறம் கழிவு நீர் தேங்கியிருப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் குழந்தைகளை தெருக்களில் விளையாட வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாரதிநகரை சேர்ந்த ஜோதி கூறுகையில், மூன்று வருடங்களாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்து வருகிறோம். இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை கழிவு நீரை அகற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

பாரதிநகரைச் சேர்ந்த அன்னகாமு கூறுகையில், கழிவு நீர் மாத கணக்கில் தேங்கியுள்ளது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களோ, மேற்பார்வையாளர்களோ இப்பகுதிக்கு முறையாக வருவது கிடையாது. மாலை 5 மணிக்கு மேல் கொசுப்பண்னை போல் எங்கள் பகுதி உள்ளது. மலேரியா, வயிற்றுபோக்கு நோயினால் எங்கள் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் நாங்கள் சிரமப்படுகிறோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தகுந்த நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும். நகரின் மையப்பகுதியில் குளம் போல் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. லட்சகணக்கான கொசுக்கள் உற்பத்தியாகிறது என்றார்.

Related Stories: