மாயாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்: உயிரை பணயம் வைத்து பரிசலில் ஆற்றை கடந்த மக்கள்

ஈரோடு: பவானிசாகர் வனப் பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிற மழை நீர் கரைபுரண்டு ஓடுவதால் வன கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம், சித்திரம்பட்டி, புதுக்காடு உள்ளிட்ட வன கிராமங்கள் உள்ளன.

1500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த வன கிராமங்களை சேர்ந்த மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை கடந்து பேருந்தில் ஏறி பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வர்.  இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் தெங்குமரஹாடா வன கிராமத்தை ஒட்டி ஓடும் மாயாற்றில் செந்நிற மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இன்று காலை வன கிராமங்களை சேர்ந்த மக்கள் மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் கரையில் நின்றபடி தவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த பரிசல் ஓட்டி கிராம மக்களை பரிசலில் ஏற்றி கரைபுரண்டு ஓடும் ஆற்று நீரை லாவகமாக பரிசல் இயக்கி மக்களை கரை கொண்டு சேர்த்தார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் பேருந்தில் ஏறி சென்றனர். கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் பரிசலை இயக்கி மக்களை கரை சேர்த்த பரிசல் ஓட்டிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: