சுங்கச்சாவடி இல்லாத நிலையே இலக்கு: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் பேச்சு

வேலூர்: வேலூரில் நேற்று  நடந்த மக்களவை தொகுதி பாஜ பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் 90 சதவீதம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டப்பணிகள் தொடங்கப்படும். இத்திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் ரத்து செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு கேட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் இலக்கு ஆகும். அதன்படி 2 ஆண்டுகளில் எலக்ட்ரானிக் முறையில் சுங்க வசூலிப்பு முறையை அமல்படுத்திய பின்னர் அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: