திருச்செந்தூர் கோயிலில் இன்று ஆனி வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (8ம் தேதி) ஆனி வருஷாபிஷேக விழா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆனி வருஷாபிஷேக விழா இன்று (8ம் தேதி) நடந்தது.  இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5  மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு மகாமண்டபத்தில் தங்ககுட கும்ப பூஜை நடந்தது.

காலை 8.55 மணிக்கு திருக்கோயில் மேல்தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள் சன்னதி விமானங்களுக்கு  போத்திகள் மூலமும், சண்முகர் சன்னதி விமானத்திற்கு சிவாச்சாரியார் மூலமும், வெங்கடாசலபதி சன்னதி விமானத்திற்கு பட்டாச்சாரியார் மூலமும்  வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

அன்று  மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து கோயிலில் இருந்து சுவாமி  குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  கார்த்திக், அலுவலக கண்காணிப்பாளர்கள், உள்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும்  அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: