விவாகரத்து கேட்டதால் ஆத்திரம் மனைவி, மகளை வெட்டியவர் கைது

சென்னை: திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (எ) சேட்டு(52). இவரது மனைவி மஞ்சுளா(48). இவர்களது மகள் ஜெயஸ்ரீ(23). சந்திரனுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளா திருவள்ளூர் நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, தந்தைக்கு எதிராக ஜெயஸ்ரீ ஆஜரானதால் சந்திரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கடந்த 2ம் தேதி இரவு 8 மணியளவில் ஜெயஸ்ரீ, மஞ்சுளா மற்றும் அவரது உறவினர் லட்சுமி ஆகியோர் தங்களது வீட்டருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்திரன் மகளையும், மனைவியையும் அசிங்கமாக திட்டி `என் மேலேயே கேஸ் போடுறீங்களா’ என சத்தம் போட்டுள்ளார். அப்போது சந்திரன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஜெயஸ்ரீயின் தலையில் வெட்டியுள்ளார். அப்போது மஞ்சுளா தடுத்தபோது அவரது தலை, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் தாய், மகள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் சந்திரனை பிடிக்க முற்பட்டபோது அவர்களையும் வெட்டிவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்

ளார். இதனையடுத்து ஜெயஸ்ரீயின் சகோதரர் விக்னேஷ் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆட்டோ மூலம் இருவரையும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மஞ்சுளா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயஸ்ரீ திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திதரதாசன், மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்ற சந்திரனை தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: