அரசியலமைப்பு சட்டம் பற்றி சர்ச்சை பேச்சு சட்டப் பேரவையில் அமைச்சர் மன்னிப்பு

திருவனந்தபுரம்: ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களை கொள்ளையடிப்பதற்கு மட்டுமே உதவுகிறது,’ என்று பேசிய கேரள அமைச்சர் சஜி செரியானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சட்டசபையில் அவர் மன்னிப்பு கேட்டார். கேரள மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் சஜி செரியான். நேற்று முன்தினம் இவர் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களை கொள்ளையடிப்பதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் சொன்னதைத் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்துள்ளனர். ஏழை மக்களை ஏமாற்றும் நோக்கத்தில்தான் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார். இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்திய அரசியலமைப்புக்கு சட்டத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் சஜி செரியானை பதவி நீக்கம் செய்யும்படி கோரி, கேரள பாஜ முன்னாள் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து மனு கொடுத்தார். இதையடுத்து, அமைச்சர் சஜி செரியான் பேசிய விவரங்களை தனக்கு அனுப்பி வைக்கும்படி கேரள தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் நேற்று கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. பேரவையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், செரியன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இதையடுத்து, சஜி செரியான் பேசுகையில், ‘‘அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை.

நான் பேசிய சில கருத்துக்களை திரித்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர். என்னுடைய கருத்தில் தவறான அர்த்தம் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார்.

Related Stories: