அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து

லண்டன்: அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் என்னிடம் இல்லை; தொடர்ந்து நடிகனாகவே இருக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்தார். லண்டன் பால் மாலில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ஹிந்துஜா மற்றும் பாலிவுட் புத்தக வெளியீட்டு விழாவில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அரசியலுக்கு வருவதற்கான திட்டம் ஏதும் என்னிடம் இல்லை. அது நமக்கு ஒத்துவராது. சினிமாவில் நடிப்பதே போதும்; அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு நடிகனாக சமூக பிரச்னைகளை எழுப்பி, என்னால் முடிந்ததை செய்கிறேன். 150 படங்களில் நடித்துள்ளேன்; எனது படங்களின் மூலம் நாட்டிற்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்கிறேன். அதுவே எனது வேலை’ என்று பதிலளித்தார். இவரை அரசியலுக்கு இழுத்து போட சில தேசிய கட்சிகள் முயற்சித்த நிலையில், தற்போது இவரது கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: