பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம்; லீனா மீது டெல்லி போலீஸ் வழக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம்

புதுடெல்லி: பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின்  போஸ்டர் திரையிடப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டுவிட்டரில் ட்ரெண்டானது.

அதில், இந்து தெய்வமான காளி வேடமணிந்த பெண் ஒருவர், வாயில் சிகரெட் புகைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் கையில் எல்ஜிபிடி கொடியும் வைத்துள்ளார். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டல், காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், இந்து தெய்வத்தை அவமதித்ததாகவும் தங்கள் மத உணர்வுகளை லீனா மணிமேகலை புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டானது.

குறிப்பாக பாஜகவினர் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கனடா நாட்டை சேர்ந்த இந்து தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தூதரகம் சார்பில் எங்களது கவலைகளை தெரிவித்தோம். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கனடா அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அனைத்து ஆட்சேபனைக்குரிய போஸ்டர்களையும் உடனடியாக அகற்றுமாறு கனடா அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

மத உணர்வை புண்படுத்தக் கூடாது

லீனா மணிமேகலை இயக்கிய ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் இதுகுறித்து கூறுகையில், ‘​​மத உணர்வுகளை புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் படைப்பாற்றலை எப்போதும் ஆதரிக்கிறேன். அதற்காக மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்’ என்று கூறினார்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் சில போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்தார். துர்கா தேவியின் வேடமணிந்த இவரது போட்டோஷூட் படங்களால் அவருக்கு எதிராக கொலை மிரட்டல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: