வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்

சென்னை: பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ள எடப்பாடி அணி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் எடப்பாடி அணியின் முயற்சியை சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை பதவி விவகாரம் கடும் மோதலை எழுப்பியுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிர்வாகிகள் இருந்தாலும், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான தொண்டர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11-ந்தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி அனைத்து முடிவுகளையும் அதிரடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில், வருகிற 11-ந்தேதி வானகரத்தில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்கும் ஏற்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி அணி தொடங்கி உள்ளது.

அதன் ஒருபகுதியாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் தலைமை கழகம் என்று பெயரிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும். என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 தீர்மானங்களை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில், கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானம் தயாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது முதல் தீர்மானம் ஆகும்.

அதன்பிறகு ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள் அடுத்தடுத்து கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளன. அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. இதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானமும் கொண்டுவரப்பட உள்ளது.

தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டு, பதவிக்காலம் இன்னும் முடியாததாலும், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து அவசியம் என்பதாலும், இந்தக் கூட்டத்தை சட்டத்தின் மூலம் நடத்தாமல் தடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தபடி பொதுக்குழு நடைபெற்று, தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Related Stories: