ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திராவில் மோடி சுற்றுபயணத்தில், வானில் கருப்பு பலுான்களை பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் நகரில் உள்ள ஏ.எஸ்.ஆர்.நகர் பூங்காவில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தில் ரூ.3 கோடி செலவில் சுதந்திரப் போராட்ட தியாகி அல்லூரி சீதா ராமராஜுவின் 30 அடி உயரம், 15 டன் எடையுள்ள வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை திறப்பதற்காக விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், கவர்னர் பிஷ்வ பூஷன் ஹரிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். பின்னர், ஹெலிகாப்டரில் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள பேடா அமிராமில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். பின்னர், பிரதமர் மோடி 30 அடி உயர அல்லூரி சீதாராம ராஜூவின் வெண்கல சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘பழங்குடியினரின் வீரத்தின் அடையாளம் அல்லூரி சீதராமராஜூ ஆவார். அல்லூரி தன் வாழ்வை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அல்லூரி சிறு வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர். உய்யல வாடா நரசிம்ம ரெட்டி சிறந்த போராட்ட வீரர். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பழங்குடியினர் அருங்காட்சியகங்களும் அல்லூரி நினைவு அருங்காட்சியகமும் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் லம்பசிங்கியில் அமைக்கப்படும்’’ என்றார். தொடர்ந்து, அல்லூரி சீதாராம ராஜுவின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

முன்னதாக, பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கட்டிடங்களின் மாடியில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு பலூனை பறக்கவிட்டனர். ஹைட்ரஜன் நிரப்பிய பலுான்களை அவர்கள் பறக்க விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமரின் சுற்று பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளது என்று பாஜவினர் குற்றம் சாட்டினர். காங்கிரசார் வெளியிட்ட வீடியோ பதிவில், ஹெலிகாப்டர் பறந்து உயரே செல்லும் போது கருப்பு பலுான்கள் உயரத்தில் பறப்பது தெரிகிறது.

ஆனால் ஹெலிகாப்டரின் அருகே பலுான்கள் சென்றதா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பிரதமரின் சுற்று பயணத்தின் போது கன்னாவரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு மீறல் நடந்ததாகக் கூறப்படுவதை மறுத்த போலீசார், பிரதமர் மோடி புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விமான நிலையத்திலிருந்து 4 கி மீ தொலைவில் உள்ள சுரம்பள்ளி கிராமத்தில் சில பலூன்கள் விடப்பட்டதாக கூறினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் மகளிர் அணி பிரமுகர் சுங்கரா பத்மஸ்ரீ உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* விளக்கம் கேட்கிறது எஸ்பிஜி

பிரதமர் மோடியின் பாதுகாப்பை கவனிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) பலுான்கள் பறக்க விடப்பட்டது மிகவும் ஆபத்தானதாக கருதுவதாக தெரிகிறது. அது பலுான்களா அல்லது டிரோன்களா என தெரியவில்லை. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆந்திர போலீசாரை எஸ்பிஜி கேட்டு கொண்டுள்ளது.

* கியூவில் நிற்கும் நிலை போனது

குஜராத் மாநிலம் காந்திநகரில்  டிஜிட்டல் இந்தியா வாரவிழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘கடந்த 8  ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு விஷயத்துக்கும் மக்கள் வரிசையில்(கியூ) நிற்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பல்வேறு சேவைகள் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கியூவில் நிற்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தான் காரணம் ஆகும். மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப  புதிய தொழில்நுட்பங்களை மாற்றாவிட்டால் இந்தியா பின்தங்கிய நிலையிலே இருந்திருக்கும்’’ என்றார்.

Related Stories: