கந்தர்வகோட்டை வங்கார ஓடை குளத்தை சுற்றிலும் நடைப்பயிற்சி செல்ல பவர் பிளாக் ரோடு அமைக்க மக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் கொத்தகம் சாலையில் வங்கார ஓடை என்னும் பொதுமக்கள் குளித்து துணி துவைக்கும் குளம் உள்ளது. இந்தக் குளம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் குளிப்பதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக படித்துறை உள்ளது. ஊரின் மையப்பகுதியில் குளம் உள்ளதால் கந்தர்வகோட்டை மக்களும், காட்டு நாவல் மக்களும், கொத்தகம் கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கந்தர்வகோட்டை ஊராட்சியில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பகுதி இல்லாததால் இந்த குளத்தில் நான்கு கரைகளையும் அகலப்படுத்தியும், குளத்தை ஆழப்படுத்தியும் படித்துறைகளை சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும் 4 புற குளக்கரைகளில் பவர் பிளாக் ரோடு அமைத்து குள கரைகளில் பூச்செடிகளும், நிழல் தரும் மரங்களை நட வேண்டும். கரைகளை சுற்றிலும் ஆங்காங்கே மக்கள் அமர இருக்கைகளும் அமைத்து தரவேண்டும் எனவும், குளக்கரையை சுற்றிலும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தரவேண்டும் எனவும், குளத்தில்அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குளத்தில் நீர் நிரப்பி குழந்தைகளுக்கு படகு சவாரி செய்யவும், குளத்தில் கரைகளில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு பலகை விளையாட்டு மேடையும்.

பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்து குளத்தை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பொழுது பூங்கா போன்ற சூழ்நிலையை செய்து தரவேண்டும். மேலும் இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் காலை,மாலை நடைப்பயிற்சி செய்ய குளக்கரையை பயன்படுத்த பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். குளத்தின் கரைகளில் அருகேயே ஐயப்பன் கோயில், முருகன் கோயில், விநாயகர் கோயில் உள்ளதாலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், வட்டார வள மைய அலுவலகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் உள்ளதால் பொழுதுபோக்கு அம்சமும், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் என கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையிடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: