ஜாமீன் மனு நிராகரிப்பு பாக்., சிரியாவில் இருந்து ஜூபைருக்கு நன்கொடை: டெல்லி போலீஸ் புதிய வழக்கு

புதுடெல்லி: ‘ஆல்ட் நியூஸ்’ இணையதள நிறுவன இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு பாகிஸ்தான், சிரியா நாடுகளில் இருந்து நிதியுதவி வந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ‘ஆல்ட் நியூஸ்’ இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர், கடந்த 2018-ம் ஆண்டில் தனது டிவிட்டர் பக்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும்படி சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவிட்டதாக டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நேற்று, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் காவலில் உள்ள ஜூபைர், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘இது வெறும் டிவிட்டர் பதிவு தொடர்பான வழக்கு அல்ல. பாகிஸ்தான், சிரியா, வளைகுடா நாடுகளிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான நிதி, அல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ப்ரவ்தா மீடியாவுக்கு கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தில் முகமது ஜூபைர் தான் இயக்குநராக இருக்கிறார். ஆனால், அந்த நிதியுதவி தொடர்பான டிவிட்டர் பதிவுகளை அவர் அழித்துள்ளார். எனவே, அவர் மீது கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்,’’ என்றார். இதை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை நிராகரித்து, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories: