மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஷிண்டேவுக்கு ஆளுநர் கெடு: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு

மும்ைப: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய முதல்வர் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடத்தப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். இந்நிலையில், புதிய முதல்வர் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை, நாளை மறுதினம் 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நேற்று பேட்டி அளித்த ஷிண்டே, தனக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, மகா விகாஸ் அகாடி கூட்டணி தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல், உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜராகி, ‘ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஷிண்டேவுக்கு ஆதரவளித்துள்ள 39 எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்,’ என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அன்றே ஏன் செய்யவில்லை?

பதவி இழந்த பின் முதல் முறையாக கட்சி தொண்டர்களை நேற்று சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘‘2019 சட்டப்பேரவை தேர்தலின் போது, 2.5 ஆண்டுகள் சிவசேனாவுக்கு ஆட்சி செய்யும் பொறுப்பு தர வேண்டுமென அமித்ஷாவிடம் கேட்டேன். அப்போதே அவர் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணியே அமைந்திருக்காது. அதிருப்தி எம்எல்ஏக்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மக்களின் ஓட்டுக்களை பயனற்றதாக்கி விட்டனர்,’’ என்றார்.

Related Stories: