வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவியை கொன்ற கணவர் கைது: பாலக்காட்டில் பயங்கரம்

பாலக்காடு: பாலக்காடு அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அடுத்துள்ள காராக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அவிநாஷ் (30). இவர் பெங்களூரூ விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி கம்பெனியில் பணியாற்றினார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கோவை புலியகுளத்தை சேர்ந்த ரவிசரண் என்பவரது மகள் தீபிகா (28)வை திருமணம் செய்தார். தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவிநாஷ் வேலையை விட்டு நின்று வீட்டில் கடந்த 2 மாதமாக சும்மா இருந்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று காலை தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அவிநாஷ் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தீபிகாவை சரிமாரியாக வெட்டியதில் தீபிகா ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அபிநாஷை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உயிருக்கு போராடிய தீபிகாவை மீட்டு பெருந்தல்மன்னா கூட்டுறவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்காடு போலீசார் வழக்குப்பதிவு அவிநாஷை கைது செய்தனர்.

Related Stories: