அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் எங்கள் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்; உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

புதுடெல்லி: ‘அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’ என ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு   தொடர்பாக தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நள்ளிரவில் விடிய விடிய விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கி அமர்வு வழங்கிய உத்தரவில், ‘‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’’ என தெரிவித்தனர். இந்த உத்தரவானது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும் இதையடுத்து கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் 23 தீர்மானங்களை நிறைவேற்றக் கூறியும் அதனை கூட்டத்தில் செயல்படுத்தாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: