முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பின் மின்சாரம்: போர்கால அடிப்படையில் நடக்கும் பணி

ராய்ரங்க்பூர்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகி விட்டது. நாடு முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான மலை கிராமங்கள், குக்கிராமங்கள் இன்னும் மின்சார வசதி இல்லாமல்தான் இருக்கின்றன. இவற்றுக்கு  மின்சார வசதி  கிடைக்க வேண்டும் என்றால், அங்கிருந்து ஒரு தலைவன்  உருவாக வேண்டும். அப்படிதான், பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பிறந்த கிராமத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

ஒடிசா மாநிலம், மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம்தான், முர்மு பிறந்த பழங்குடியின மலைக் கிராமம். முர்மு தற்போது  வசித்து வரும் ராய்ரங்க்பூர் நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. உபர்பேடாவில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தமாக 3,500 பேர் வசிக்கின்றனர். இவற்றில் பதசாகி கிராமத்தில் முழுமையாக மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. துங்கிரிசாகியில் மின்சாரம் கிடையாது. இங்குதான் முர்முவின் உறவினர்கள் வசிக்கின்றனர். ஒடிசாவில் முர்மு கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். அதேபோல், ஜார்கண்ட் ஆளுநர் பதவியையும் வகித்துள்ளார்.

அப்போது கூட, இவருடைய  சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி செய்யப்படவில்லை.இந்தநிலையில், பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டதும், அவருடைய வெற்றியும் உறுதியாகி இருப்பதால், உபர்பேடா கிராமத்தின் மீது உலகத்தின் பார்வை விழுந்துள்ளது. இதையடுத்து, துங்கிரிசாகி உட்பட இந்த கிராமம் முழுவதற்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான பணியை ஒடிசா அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான சிமென்ட் கம்பங்கள், மின்சார கேபிள்கள், டிரான்ஸ்பார்கள் மலைக்கு தூக்கி செல்லப்பட்டு உள்ளன. அடுத்த சில நாட்களில் முர்முவின் கிராமம், மின்சார ஒளியில் மின்ன உள்ளது.

Related Stories: