இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து இன்று போராட்டம்: மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் பேட்டி

சென்னை: இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து இன்று காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி மக்களவை துணைத் தலைவரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் அதிகாரியுமான கவுரவ் கோகாய் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: அக்னிபாதை திட்டம் இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டமாகும். யாரிடமும் கருத்து கேட்காமல் மோடி அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அக்னிபாதை திட்டம் முடிந்து ராணுவத்தில் சேர முடியாமல் மீண்டும் சொந்த கிராமத்துக்கு செல்லும் இளைஞர்களின் மனநிலை மிக மோசமாக இருக்கும். இது அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது இதேபோன்று தற்காலிகமாக ராணுவ அதிகாரியை நியமிக்கும் திட்டமிருந்தது.

ஆனால் நிரந்தர ராணுவ வீரர்களும் பணியமர்த்தம் திட்டமும் இருந்தது. ஆனால் தற்போது தற்காலிக ராணுவ வீரர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுகின்றனர். நிரந்தர ராணுவ வீரர்கள் திட்டத்தை அடியோடு இல்லாமல் செய்கின்றனர். பொதுவாக ராணுவத்தில் பயிற்சி பெற்று முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது வெறும் 6 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். இதனால் நாட்டுக்கு மிகவும் ஆபத்து. எனவே இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை(இன்று) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: