அதிமுக ஆபீஸ்களில் ஓபிஎஸ் படம் அகற்றம் நாகையில் இபிஎஸ் உருவபொம்மை எரிப்பு

நாகை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றை தலைமை வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வலியுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவமானப்படுத்தப்பட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள் கட்சி அலுவலகங்களில் மாட்டப்பட்டிருந்த ஓபிஎஸ்சின் படங்களை அகற்றி வருகின்றனர். திருச்சி தில்லைநகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று  ஓ.பன்னீர்செல்வம் படம் கிழிக்கப்பட்டது. அலுவலகம் வெளியே வைக்கப்பட்டுள்ள  பேனரில் ஓபிஎஸ் படம் மறைக்கப்பட்டது. இதேபோல், திருச்சி புதுகை சாலையிலுள்ள  தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டது. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், நேற்று எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே ஓபிஎஸ் ஆதரவாளர்களான, முன்னாள் நகர அதிமுக துணை செயலாளர் வீரராசு, நகர அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி ஒழிக, ஓபிஎஸ் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: