‘புஷ்பா’ திரைப்பட பாணியில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய 546 கிலோ குட்கா பறிமுதல்-மைசூரில் இருந்து கடத்திய 4 பேர் கைது

சின்னாளபட்டி : மைசூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மினி லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 546 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டிக்கு, மைசூரில் இருந்து லாரி மூலம் குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்று பஞ்சம்பட்டி பிரிவு வழியாக ஊருக்குள் சென்று, மாதா நகரில் உள்ள கடையில் குட்கா பண்டல்களை இறக்குவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், குட்காவுடன் மினி சரக்கு லாரியை கைப்பற்றினர்.

சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு லாரியை கொண்டு சென்று சோதனை செய்தனர். இதில் ‘புஷ்பா’ திரைப்படத்தை போல் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தியது தெரியவந்தது. ரகசிய அறையில் இருந்த 546 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை கடத்தி வந்த மைசூர், ராகவேந்திரா நகரை சேர்ந்த ராக்கேஸ்(24), சூரமங்களம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(31), குட்காவை வாங்கிய பஞ்சம்பட்டி அந்தோணியார் தெருவை சேர்ந்த ரோஸ்பாண்டி, மாதா நகரில் கடை வைத்திருக்கும் அவரது தம்பி ஜெகன் தினகரன் ஆகியோரை, சின்னாளபட்டி எஸ்ஐ கோமதி வழக்குப்பதிந்து கைது செய்தார். கொரோனா பரிசோதனைக்கு பிறகு நால்வரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: