வாலாஜாபாத்தில் அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம்: எம்எல்ஏ, எம்பி துவக்கி வைத்தனர்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசு மருத்துவனையில் புதிதாக டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தினை எம்எல்ஏ, எம்பி துவக்கி வைத்தனர்.வாலாஜாபாத் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்பு, 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பணியாற்றி வந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளிப்புற நோயாளிகள் என நாள்தோறும்  நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருவோர் அதிகரித்தநிலையில், இங்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் ஜீவா தலைமை தாங்கினார். விழாவில், சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு 12 லட்சம் மதிப்பீட்டிலான புதிய தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை மக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சுந்தர் எம்எல்ஏ எக்ஸ்ரே பயன்பாடுகள் காலை முதல் மாலை வரை செயல்படும் நேரங்கள் எக்ஸ்ரே எடுத்து முடித்தபின்பு வழங்கப்படும் பிலிம் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்கள், இந்த எக்ஸ்ரே இயந்திரம் மூலம் விபத்து காயங்களுடன் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கை, கால் முறிவு குறித்து உடனடியாக தெரிந்துகொண்டு மேல் சிகிச்சைக்காக எந்த மருத்துவமனைக்கு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கி மேல் சிகிச்சைக்காக அனுப்ப உதவியாக இருக்கும்’ என்றனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி, திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சேகர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: