குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சார்பில் கிடாவெட்டி கறிவிருந்து-சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

குளித்தலை : குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சார்பில் கிடாவெட்டி நடந்த கறிவிருந்து சமூக வலை தளங்களில் வீடியோ வைரலாக பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் சேர்ந்து கிடாவெட்டி மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டிடத்தில் சமையல் செய்து பிரியாணி விருந்து வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையில் கிளப்பி வருகிறது.

இது அரசு மருத்துவமனையா? பார்ட்டி நடத்த தனியார் திருமண மண்டபமா? குளித்தலை அரசு மருத்துவமனையில் தடபுடலான விருந்து விழா எதற்காக என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதனிடம் கேட்டபோது, குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதால், அடிக்கடி மனதளவில் பாதிக்கப்பட்டு வருவதால் ஒருநாள் இதுபோன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இந்த விருந்து நடத்தப்பட்டதாகவும், இந்த புகைப்படங்களை சர்ச்சையை கிளப்புவதற்காக சிலர் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் கரூர் பகுதிக்கு கொண்டு செல்வதாக, ஏற்கனவே சர்ச்சை எழுந்துவரும் நிலையில், மருத்துவமனையில் கறிவிருந்து நடந்த சம்பவம், குளித்தலை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: