அதிமுக ஆட்சியில் அவசரகோலத்தில் திறக்கப்பட்ட மூக்கையூர் மீன்பிடி துறைமுக கட்டுமானம் 3 ஆண்டுகளில் ஆட்டம் காணும் பரிதாபம்-முறையாக பணிகள் நடக்கவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு

சாயல்குடி : மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் தரைப்பாலம், கால்வாய் கட்டுமானங்கள் 3 ஆண்டிற்குள் சேதமடைந்ததால், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் மிக ஆழமான கடற்பகுதியைக் கொண்டது. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க 2016, டிச. 30ம் தேதி ஒன்றிய அரசு ரூ.113.90 கோடி, தமிழக அரசு ரூ.56.95 கோடியை பங்கு தொகையாக போட்டு பணியை துவங்க ஒப்புதல் கொடுத்தது.

2017 முதல் கடற்கரையில் துறைமுகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. 20 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையில், 2019 மார்ச் 4ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் துறைமுகத்தை திறந்து வைத்தார். பணிகள் முழுமை பெறாமல் துறைமுகத்தைத் திறக்க வேண்டாம் என மீனவர்கள் வலியுறுத்தியும், அவசர கோலத்தில் திறக்கப்பட்டது.

துறைமுகம் திறக்கப்பட்டப் பிறகும், 2020 வரையிலும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், படகு அணையும் தளம் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சிறு பாலம் தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் கடல் மற்றும் படகுகளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் மழைநீர், கழிவுநீர் கால்வாய்களும் சேதமடைந்துள்ளன. துறைமுகம் உள்பகுதி, சுற்றுச்சுவர் பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்து வளர்ந்து கிடக்கிறது.

குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. போதிய உயர்கோபுர மின்விளக்குகள் இருந்தும் பயன்பாடில்லை என மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

மூக்கையூர் மீனவர்கள் கூறும்போது, ‘‘மூக்கையூர் துறைமுகம் உள்கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிவுறாத நிலையில் 2019ல் அவசர, அவசரமாக திறக்கப்பட்டது. துறைமுகத்தில் 200 விசைப்படகுகள் நிறுத்தும் அளவிற்கு படகு நிறுத்தும் தள பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. முறையாக பணி நடக்காததால் தற்போது 100 படகுகளை கூட நிறுத்த முடியவில்லை. கடல் அலையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் முழுமையாக அமைக்காததால், துறைமுக பாலங்கள் சேதமடைந்து வருகிறது.

 படகு நிறுத்தும் தளத்தை முழுமையாக ஆழப்படுத்தவில்லை. உரிய இடவசதியின்மை, போதிய தடுப்புகள் இன்றி அலை நேரடியாக வருவதால் கரையோரம் நிறுத்தப்படும் படகுகள் அனைத்தும் ஒன்றோடு, ஒன்று மோதி சேதமடைந்து வருகிறது. மேலும் சாலைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், கால்வாய்கள் சேதமடைந்து கிடக்கிறது’’ என கூறினார்.

திமுகவால் மேம்படும் துறைமுகம்

கடந்த 2010 திமுக ஆட்சியின் போது மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கியது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சியில் முறைகேடுகளால் துறைமுகம் முறையாக அமைக்கவில்லை. தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சார்பில் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் முழு வீச்சுடன் நடந்து வருகிறது. பணிகள் நிறைவுற்றவுடன் துறைமுகம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பொலிவு பெற உள்ளது.

Related Stories: