உயிரிழந்தவர்களின் 24 சடலங்கள் ஒரே இடத்தில் தகனம், அடக்கம்

கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு உறவினர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் கருணாபுரம் பகுதியை சேர்ந்த 24 பேரின் சடலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அரசின் சார்பில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் நகராட்சி அதிகாரிகள் இறுதி சடங்குக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி கருணாபுரம் அருகில் உள்ள மணிமுத்தாற்றங்கரை ஓரத்தில் 18 நபர்களின் சடலங்கள் தகனம் செய்வதற்காக மரக்கட்டைகள் அடுக்கி அதன் மேல் எருமட்டைகள் மற்றும் வைக்கோல் போட்டு தகனம் செய்வதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலத்தை வைத்து இறுதி மரியாதைக்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது. இதே போல் இந்த ஆற்றங்கரை ஓரத்தில் 6 பேரின் சடலங்கள் புதைப்பதற்கான ஏற்பாடுகளையும் நகராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஆறு குழிகள் வெட்டப்பட்டு அதில் உயிரிழந்தவர்கள் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

* கண்ணீர் கடலில் கருணாபுரம்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் மட்டும் விஷசாராயம் குடித்து 25 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு தெருவிலும் 10 அடிக்கு ஒருவர் வீதம் இறந்தவர்களின் சடலங்கள் பந்தல் போட்டு வைக்கப்பட்டிருந்தன. உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது நெஞ்சை பதற வைத்தது. ஒரே தெருவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே சமயத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் கதறி அழுதது அனைவரையும் உருக வைத்தது. மேலும் அதே கிராமத்தில் தந்தை, மகன் உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் கருணாபுரம் கிராமமே கண்ணீர் கடலில் மூழ்கியது.

* வெளிநாட்டிலிருந்து மகள் வந்தால்தான் மனைவியின் சடலத்தை எடுப்பேன்: முதியவர் கதறல்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களில் இந்திரா (50) என்பவரும் ஒருவர். இவர் நகராட்சி கருணாபுரம் பகுதியில் கூலி வேலை செய்யும் குப்பன் (60) என்பவரின் மனைவி. இவர்களது மகள் கோமதி (34), குவைத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். தாய் உயிரிழப்பை அறிந்து வெளிநாட்டிலிருந்து கண்ணீர் மல்க வீடியோ கான்பரன்சிங் மூலமாக தந்தை மற்றும் உறவினர்களிடம் பேசினார். இதுகுறித்து குப்பன் கூறுகையில், கோமதி குவைத்தில் இருந்து தாயின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரவேண்டும் என்றும் இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மகள் கோமதியை அழைத்து வர தமிழக அரசும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மகள் கோமதி வரும் வரை மனைவி இந்திராவின் சடலத்தை எடுக்கப் போவதில்லை என கண்ணீர் மல்க கூறினார்.

* வீடு வீடாக மருத்துவ குழு தொடர் சோதனை 36 பேரை மீட்டு சிகிச்சை
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிறப்பு மருத்துவ குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்தனர். மேலும் கருணாபுரம் பகுதியில் சுகாதார துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், பாலா உள்ளிட்ட செவிலியர்கள் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே முடங்கியிருந்த 36 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோவில் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று காலை முதல் மாலை வரை நடமாடும் மருத்துவ குழு மூலம் கருணாபுரத்தில் 3 இடங்களில் மருத்துவ முகாம் அமைத்தும் சிகிச்சை அளித்தனர்.

* மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்ய 29 அதிகாரிகள் நியமனம்
விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று உடல் தகனம் மற்றும் அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இந்து மத முறைப்படி இறந்தவர்களின் சடலத்தை குடும்பத்தினர் தண்ணீர் குடத்துடன் எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்தனர். இதேபோல் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடலை பெட்டியில் வைத்து சிலுவையை கையில் ஏந்தியபடி கிறிஸ்துவ பாடல்களை பாடி, தேவாலயத்தில் வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்து வந்து அடக்கம் செய்தனர். ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு, தகனம், அடக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு பணிகளை கவனிப்பதற்காக வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட 29 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் முன்னிலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்வது, குழி தோண்டுவது, மரக்கட்டைகளை அடுக்கி தகனம் செய்வதற்கான ஏற்பாடு செய்வது போன்ற பணிகள் நடந்தது. உடல்களை அங்கு எடுத்து வர அரசு சார்பில் இலவச ஊர்தி வசதியும் செய்யப்பட்டது.

* விஷசாராய பலி இதுவரை…
ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பம், தமிழ்நாட்டில் இதுவரை விஷ சாராயத்தில் பலியானவர்கள் பற்றி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 2001ல் விஷ சாராயம் குடித்து 53 பேர் பலியாகி உள்ளனர். சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் 2001ல் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்பகுதியில் 2020ல் 20 பேர் பலியாகினர். 2021ல் 6 பேர் விஷ சாராயத்துக்கு இறந்துள்ளனர். 2023ல் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் 21 பேர் உயிரிழந்தனர்.

The post உயிரிழந்தவர்களின் 24 சடலங்கள் ஒரே இடத்தில் தகனம், அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: