மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல்: அனைத்து எம்எல்ஏக்கள் மவுன அஞ்சலி

சென்னை: மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் மற்றும் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி ெசலுத்தினர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாணிக்கராஜ், இ.ரவிக்குமார், டாக்டர் வி.தனராஜ், வ.சின்னசாமி, டாக்டர் எ.ராமகிருஷ்ணன், அ.கணேசமூர்த்தி, சு.சிவராமன், ச.வேணுகோபால், ஆ.கு.சீ.அன்பழகன், இராம வீரப்பன், இரா.இந்திராகுமாரி, எம்.எச்.ராஜூ, சி.வேலாயுதன், தா.மலரவன், தா.ராசாம்பாள், மொ.பரமசிவம், சி.ராமநாதன் ஆகிய 17 முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து எம்எல்ஏக்களும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து கடந்த 12ம் தேதி குவைத் தீவிபத்தில் இறந்த 7 தமிழர்களுக்கும் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டு, அனைத்து எம்எல்ஏக்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் விஷ சாராயம் குடித்த 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சபாநாயகர் அப்பாவு பேசும்போது, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகேழந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்தார். இவர் பழகுவதற்கு இனிய பண்பாளராகவும், எளிமையானராகவும் இருந்தார். அனைவரிடமும் கட்சி பாகுபாடின்றி பழகக்கூடியவர். சமூக தொண்டாற்றுவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அரசின் திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு செல்வதில் சிறப்பாக பணியாற்றினார் என்றார். மறைந்த எம்எல்ஏ புகழேந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சபாநாயகர் அப்பாவு பேசும்போது, ‘மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்றைய கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடும்’ என்றார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேரவை கூடுகிறது. பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். இதை தொடர்ந்து நீர்வளத்துறை மானியக்கோரிக்கை முதலில் எடுத்து கொள்ளப்படும். மாலையும் கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 29ம்தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

* ராஜேஷ்குமாருக்கு புதிய இருக்கை
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கிள்ளியூர் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அமரும் வகையில் முதல் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமாருக்கு அடுத்தப்படியாக அமரும் வகையில் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் எதிர்கட்சியினர் அமரும் 2வது வரிசையில் (177ஏ சீட்) காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கை அருகே ஒதுக்கப்பட்டிருந்தது. பொன்முடி மீண்டும் அமைச்சரான பிறகு முதல் முறையாக நேற்று சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் ஏற்கனவே இருந்த அமைச்சர்களின் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார்.

* சட்டப்பேரவையில் இன்று…
தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் வினாக்கள் விடை நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து மானிய கோரிக்கைளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். முதல் மானிய கோரிக்கையாக இன்று காலை நீர்வளத்துறை, இயக்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் துவங்கும். அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பலரும் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல்: அனைத்து எம்எல்ஏக்கள் மவுன அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: