வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட 17 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை அதிரடி

சென்னை: தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை கடந்த 18ம் தேதி முதல் இயக்க போக்குவரத்து ஆணையரகம் தடை விதித்தது. அதன்படி, போக்குவரத்து துறை அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் நேற்று சோதனை செய்தனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், சென்னை சரக இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை மடக்கி சோதனையிட்டனர். அப்போது நாகாலாந்து மாநில பதிவெண்ணுடன் சென்னையில் இருந்து தேனி நோக்கி பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஒசூரில் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக வந்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகாலாந்து பதிவு எண் கொண்ட 3 பேருந்துகள், புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவை தவிர வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதுச்சேரி பதிவெண் கொண்ட 3 பேருந்துகளையும் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் மதுரை மற்றும் கோவையில் 5 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று தடை மீறி, உரிய ஆவணங்கள் இன்றி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட 17 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: