விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: விஷ சாராய சாவு, போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறியதாக மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு எஸ்பி செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு தற்போது கூடுதல் பொறுப்பாக மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

குட்கா கடத்தலில் பலர் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும், போதைப் பொருளை ஒழிக்க முதலைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குட்கா மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தநிலையில்தான் கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம் மற்றும் செய்யூரில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் எரிசாராய கடத்தலையும் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கடும் உத்தரவு பிறப்பித்தார்.

ஆரம்பத்தில் வேகம் காட்டிய மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள், போதைப் பொருள் நடமாட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். இந்நிலையில்தான் கள்ளக்குறிச்சியில் மீண்டும் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த இரு நாட்களாக ேபாலீசாரின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில மாதங்களாக போலீசில் ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு போலீசார் சட்டம் ஒழுங்கு பணியை மட்டுமே கவனிக்க வேண்டும். மதுவிலக்குப் பிரிவு போலீசார், போதைப் பொருள் தடுப்பு போலீசார் என அவர்களுக்கு உரிய பணியை மட்டுமே கவனிக்க வேண்டும்.
சிபிசிஐடி போலீசார் சிறப்பு வழக்குகளை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், போதைப் பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து உள்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு: மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவு ஏடிஜிபி பதவியை சட்டம் ஒழுங்கு பதவியுடன் கூடுதலாக கவனிப்பார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி, சென்னை மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த செந்தில்குமார், டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், கூலிப்படையினரின் நடவடிக்கைகளை ஒழித்துள்ளார். இதனால் கூலிப்படையினர் மூலம் நடைபெறும் ஆள் கடத்தல், கொலைகள் குறைந்தன. தற்போது மதுவிலக்கு மற்றும் குற்றப்பிரிவும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதால், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பணிகள் தீவிரமடையும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: