ஜனாதிபதி பொது வேட்பாளர் தேர்வு எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை: மம்தா பானர்ஜி புறக்கணிப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளன. இக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென புறக்கணித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, டெல்லியில் ஆலோசனை நடத்த 22 எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 15ம் தேதி அழைப்பு விடுத்திருந்தார்.

அக்கூட்டத்தில் திமுக உட்பட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. ஆலோசனை கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ணா காந்தி ஆகியோர் பெயர்களை பொது வேட்பாளராக நிறுத்த மம்தா முன்மொழிந்தார். ஆனால், சரத் பவார், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதே சமயம், ஜூன் 21ம் தேதி சரத்பவார் தலைமையில் டெல்லியில் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சரத்பவாரை தொடர்ந்து, பரூக் அப்துல்லாவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக சரத் பவார் தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில் மம்தா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகள் உள்ளதால், டெல்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார். இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஒருவர் கலந்து கொள்வார். இதை சரத் பவாரிடம் மம்தா ஏற்கனவே தெரிவித்தது விட்டார்’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அக்கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளையும், மாநில கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவ், கிஷண் ரெட்டி மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால், சி.டி.ரவி, சம்பித் பத்ரா உள்ளிட்ட 14 ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக யாரை தேர்வு செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

* ஜனாதிபதி தேர்தலில் 776 எம்பிக்கள், 4033 எம்எல்ஏக்கள் என 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

* இதுவரை 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். போதிய ஆவணம் இல்லாததால் 3 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

* வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 29ம் தேதியாகும்.

Related Stories: