பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரத்து எதிரொலி; நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநில பயணிகள்: போலீஸ் தீவிர கண்காணிப்பு

நாகர்கோவில்: ராணுவத்தின் தற்காலிக பணிக்கு ஆட்களை நியமிக்கும் ஒன்றிய அரசின் ‘அக்னிபாதை’ ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ரயில்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து போராட்டங்கள் நீடித்து வருகிறது. வட மாநிலங்களில் பரவி வந்த போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. இதையடுத்துநாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வந்த வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணைமேற்கொண்டனர். கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.குழித்துறை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாநிலங்களில் ரயில்கள் தீ வைப்பு சம்பவங்களை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக சத்தீஸ்கர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை இந்த ரயிலுக்கு செல்வதற்காக, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் குவிந்திருந்த வட மாநிலத்தவர்கள், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

இவர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விடிய, விடிய காத்திருந்தனர். சுமார் 300க்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். பின்னர் அவர்கள் இன்று காலை 7.55க்கு குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டுசென்றனர்.

Related Stories: