சபரிமலை அன்னதான திட்டத்தில் ரூ.58.67 லட்சம் முறைகேடு: தேவசம் போர்டு அதிகாரி கைது

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அன்னதான திட்டத்தில் ஒப்பந்தக்காரரை ஏமாற்றி ரூ.58.67 லட்சம் முறைகேடு செய்த சம்பவத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் மண்டல, மகர விளக்கு சீசனில் நிலக்கல்லில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து அப்போதைய லஞ்ச ஒழிப்பு எஸ்பியான பிஜோய் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிலக்கல் நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெயபிரகாஷ், காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் சப்ளை செய்யும் ஒப்பந்தக்காரரை ஏமாற்றி ரூ. 58.67 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தேவசம்போர்டு அதிகாரி ஜெயபிரகாஷை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: