பாபநாசம் அருகே மங்களபுரீஸ்வரர் கோயிலில் 16 முக லிங்கேஸ்வரர்: ஒரே கல்லில் வடிவமைப்பு

பாபநாசம்: தஞ்சாவூர் அடுத்த பாபநாசம் அருகே சத்தியமங்களத்தில் எழுந்தருளியுள்ள மங்களபுரீஸ்வரர் கோயில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்து இறைவன் திருமேனி மட்டும் இருந்து வந்தது. இக்கோயிலை மகான் காகபுஜண்டரின் தலைமைச் சீடரான மகான் சங்கரேஸ்வரர் என்ற சித்தரால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்த கோயில் ஆகும். அவர் இக்கோயிலில் ஐக்கியமாகி உள்ளதாக ஓலைச்சுவடி குறிப்பிடப்படுகிறது. இவ்வூருக்கு பழமையான பெயர் சதுர்வேதிமங்கலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மங்களபுரீஸ்வ ராக காட்சியளிக்கும் ஈசன் 16 முகங்களை கொண்டு சோடசலிங்கமாக இங்கு வீற்றிருக்கிறார். நவ பாசனத்திற்க இணையான காந்த தன்மைகொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமானது சுமார் 5 அடி உயரத்துக்கும், 5 அடி சுற்றளவு கொண்டது. சோடசலிங்கம் சில கோயில்களில் இருந்தாலும் இங்குள்ள லிங்கம் தாமரை மலரில் வீற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஈசனுக்கு அபிஷேகம் செய்யும்போது அபிஷேகம் திரவியங்கள் 16 கீற்றுகளாக தோன்றும், பதினாறு முக லிங்கத்தின் திருமேனி குளிர்காலத்தில் தொட்டால் இளம் சூடாகவும், வெயில் காலத்தில் தொட்டால் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

மங்களபுரீஸ்வரிடம் மனம் உருகி வேண்டியதை துதிப்பவருக்கு தீராத கஷ்டங்களை நீக்கும், மனக்கவலை நீங்கும், குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கிய தடைகளை நீக்கி அருள் புரிகிறார். இக்கோயிலின் ஈசனை தொடர்ந்து பதினோரு பிரதோஷ காலத்தில் வழிபட்டு பால் அபிஷேகம் செய்து வந்தால் தங்கள் குறைகளை நீக்கி சுகங்களைத் தருகிறார் என்பது ஐதீகம்.

Related Stories: