ஊழல், முறைகேடு புகார் எதிரொலி; விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் விஜிலென்ஸ் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

விழுப்புரம்: விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடு புகார் எதிரொலியாக விஜிலென்ஸ் எஸ்பி ஜெயலட்சுமி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இதில் பலமுக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் அதிகாரிகளிடவிசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. குறிப்பாக, ஆவின் மார்க்கெட்டிங்கில் உற்பத்தியாகும் நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் பல லட்சம் மோசடி நடந்ததாகவும், விற்பனை பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள அதிகாரி ஒருவர் மீது பல கோடி ஊழல் புகாரும் கூறப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகக்குழு மீதும் அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்நிலையில், சென்னை ஆவின் விஜிலென்ஸ் பிரிவு எஸ்பி ஜெயலட்சுமி தலைமையில் டிஎஸ்பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணிமுதல் ஆவின் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். விற்பனை பிரிவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தமைக்கான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினர். அதேபோல், கணக்கு பிரிவிலும் பலமணி நேரம் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து விற்பனை பிரிவு அதிகாரி, பொதுமேலாளர், கணக்கு பிரிவு அதிகாரிகளிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை பால் பூத்துகள் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. பால் பொருட்கள் விற்பனை எவ்வளவு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இரவு வரை நீடித்த விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதன்பிறகு ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜிலென்ஸ் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Related Stories: