சிங்கம்புணரியில் நடந்த தேரோட்ட விழாவில் ஒரு லட்சம் தேங்காய் உடைப்பு: ஹெல்மெட் அணிந்து சேகரித்த பக்தர்கள்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் உடனான பூரணை - புஷ்கலை கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முதலாவதாக விநாயகர் தேரும், சேவுகபெருமாள் பெரிய தேரும், பிடாரி அம்மன் தனித்தனி தேரில் வலம் வந்தனர்.  நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த பெரிய தேர் கோயிலின் பின்புறமுள்ள கழுவன், கழுவச்சி சிலை மீது ஏற்றப்பட்டு 5.20 மணிக்கு நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து குழந்தை வரம், தொழில்வளம், உடல் நலம் வேண்டி பக்தர்கள் தேரின் நிலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் தேங்காய்களை உடைத்தனர். தேங்காய் உடைக்கும் நிலை அருகே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து, சாக்குகளை கையில் வைத்துக் கொண்டு மூட்டை மூட்டையாக சேகரித்தனர். 10ம் நாளான இன்று இரவு பூப்பல்லாக்கு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Related Stories: