கல்லணைக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு பூதலூர் பகுதியில் குறுவைசாகுபடிக்கு தயாராகும் பணியில் விவசாயிகள் மும்முரம்

வல்லம் : கல்லணைக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், சித்திரக்குடி, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி உட்பட பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, ரெட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் கல்லணை கால்வாய் தண்ணீர்தான் சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன்வாயிலாக 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூரில் கல்லணை கால்வாய் பாலத்தை (இர்வின் பாலம்) இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் மேட்டூரில் கடந்த மே 24ம் தேதி சாகுபடி பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் தஞ்சையில் பாலம் பணிகள் நடப்பதால் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கபடவில்லை.தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு தஞ்சை கல்லணைக்கால்வாய் புதிய பாலத்தில் ஒருபுறம் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லணைக்கால்வாயில் 100 கனஅடியும் பின்னர் இந்த அளவு அதிகரிக்கப்பட்டு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீரின் அளவை கூடுதலாக திறந்தால்தான் சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலும் என பூதலூர், சித்திரக்குடி, வல்லம், ஆலக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது கல்லணைக்கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சித்திரக்குடி அருகே கோனவாரி வாய்க்காலில் வர ஆரம்பித்தது. இதையடுத்து சித்திரக்குடி, புதுகல்விராயன்பேட்டை, ஆலக்குடி பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதற்காக டிராக்டரை கொண்டு வயல்களை உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: