திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு புகார்

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது உயிருக்கு அச்சுறுதல் இருக்கிறது என்றும், இந்த சிறையில் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இரட்டை இல்லை சின்னத்திற்கு லஞ்சம் பெற முயன்ற வழக்கில், அமலாக்கத்துறை தனிவழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அண்மையில் டிடிவி தினகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சுகேஷ் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், திகார் சிறை வளாகத்தில் உள்ள 1ம் சிறையில் இருந்து தன்னை 3ம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த சிறையில் சமீபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். மட்டுமல்லாமல், சிறை அதிகாரிகள் மொத்தமாக சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் சார்பில் விசாரிக்க வேண்டும் என கோரினார். அப்பொழுது நீதிபதிகள், முறையான விண்ணப்பம் தாக்கல் செய்யாமல் உத்தரவினை பிறப்பிக்கமுடியாது என கூறிய நிலையில், உடனடியாக விண்ணப்பம் அளிப்பதாக கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பான விசாரணையை வரும் ஜூன் 13 அன்று தள்ளிவைத்தனர். மேலும் இந்த வழக்கை பொறுத்தமட்டில், இரட்டை இலை சின்னம் பெற முயன்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான உத்தரவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பிக்கிறது. அதில் தற்போது வரை சுகேஷ் சந்திரசேகர் மட்டுமே குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.    

Related Stories: