கோவையில் யூடியூப் சேனல் நடத்தி ரூ.150 கோடி மோசடி வழக்கில் கோர்ட்டில் ஒருவர் சரண்

கோவை: கோவையில் யூடியூப் சேனல் மூலம் முதலீட்டாளர்களை சேர்த்து ரூ.150 கோடி மோசடி நடந்த வழக்கில் முதலீட்டு ஏஜென்ட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம் குறிஞ்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (40). இவர் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தினார். அதிக வட்டி தருவதாக கூறி ஏஜென்ட்களை நியமித்து, பல்வேறு பகுதிகளில் கூட்டம் நடத்தி மக்களிடம் முதலீட்டு பணம் வாங்கினார். கடந்த 3 ஆண்டில் இவர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 150 கோடி ரூபாய் சுருட்டிவிட்டதாக தெரிகிறது. இவரிடம் கோவை, திருப்பூர், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகளவு பணம் இழந்துள்ளனர்.

 

பணத்தை வாரி குவித்த விமல் குமார் தனது மனைவி ராஜேஸ்வரி (35) மற்றும் இரு மகன்களுடன் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இவர் சுமார் 50 ஏஜென்ட்களை நியமித்து மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். நேரடியாக பொதுமக்களிடம் பணம் வாங்காமல் ஏெஜன்ட்களை பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இதில் முக்கியமான ‘‘முதலீட்டு ஏஜென்ட்’’ என செயல்பட்டு வந்த ஈரோடு புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் (35) என்பவர் நேற்று டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். விசாரணைக்கு பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அருண்குமார் இந்த வழக்கில் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவருக்கும் விமல்குமாருக்கும் யூ டியூப் சேனல் மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் பணம் வாங்கி தரும் ஏஜென்ட்டாக மாறினார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் 15 கோடி ரூபாய் வசூலித்து விமல்குமாரிடம் இவர் கொடுத்திருப்பதாக தெரிகிறது. இவரை போல் மேலும் பலர் பல கோடி ரூபாய் வசூலித்து விமல்குமாரிடம் தந்துள்ளனர். ஏஜென்ட் கமிஷனாக பல கோடி ரூபாய் இவர்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தப்பியுள்ள மற்ற ஏஜென்ட்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: