முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் நவீன் ஜிண்டால் நீக்கம்: பாஜ நடவடிக்கை

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்துள்ள பாஜ., நவீன் ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று அவர் மீது பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், `அனைத்து மதங்களையும் பாஜ மதிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் சித்தாந்தம், அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களை ஊக்குவிக்காது. எனவே, நுபுர் சர்மா மீதான விசாரணை முடியும் வரையில் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்,’ என்று கூறியுள்ளது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜ நீக்கி உள்ளது. இந்நிலையில், நுபர் சர்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘என கருத்து யாருடைய மத உணர்வை புண்படுத்தி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை திரும்ப பெற்று கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: