திருவண்ணாமலையில் உட்கட்சி பூசல் அதிமுக மாஜி மாவட்ட செயலாளர் அலுவலக கட்டிடம் இடித்து அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்து மறியல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரின் அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பெருமாள்நகர் ராஜன். இவர், அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தார். அப்போது, திருவண்ணாமலை- போளூர் சாலையில், தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து, தகர கூரையுடன் கூடிய தற்காலிக கட்டிடம் அமைத்து கட்சி அலுவலகம் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, கட்சி அலுவலகத்தின் செயல்பாடு குறைந்தது. எனவே, அந்த இடத்தை வாடகைக்கு கொடுத்தவர், அலுவலகத்தை காலி செய்துதருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால், இடத்தை ஒப்படைக்காமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதன் உரிமையாளர், அந்த இடத்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான சஞ்சீவிக்கு விற்றுள்ளார். அவரும், இடத்தை ஒப்படைக்குமாறு பெருமாள்நகர் ராஜனிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கட்சி அலுவலகமாக செயல்பட்ட தற்காலிக கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் இடித்து அகற்றியுள்ளனர். அதை அறிந்த பெருமாள்நகர் ராஜனின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று காலை அங்கு விரைந்து வந்தனர். அவவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென 2 இளைஞர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகாரிகள் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அதிமுகவுக்குள்் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: