நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் வீடுகள் கட்ட விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்

*ஊட்டி நகராட்சி கூட்டத்தில் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் வீடுகள் கட்ட விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

துணைத் தலைவர் ரவிக்குமார்: ஊட்டி நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்பட்டால் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி நிதி கிடைக்கும். 1992ம் ஆண்டு ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், பாதாள சாக்கடை பிரச்னை அனைத்து வார்டுகளிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதேபோல், பல இடங்களில் தற்போது தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனை அதிகாரிகள் கண்காணித்து நகரின் முக்கிய பகுதிகளில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நகரில் அனைத்து பகுதிகளிலும் கால்நடைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்சன்ஸ்வேலியில் மழைக்காலங்களில் மின் விநியோகம் தடைப்படுவதால், நீரேற்று மையத்திற்கு நிலத்தடி கேபிள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பணியாளர்களை நியமனம் செய்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1500 மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிங்களுக்கு உள்ளாட்சி அமைப்புக்களே அனுமதி வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜார்ஜ் (திமுக): பட்பயர் சாலையில், அதாவது நீதிமன்றம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்ட போதிலும், அதற்கு வர்ணம் பூசப்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையில் உள்ள வேகத்தடைகள் மட்டுமின்றி, ஊட்டி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் குடியிருப்புகள் கட்டுவதற்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காத நிலையில், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ேமலும், 2 சென்டிற்கு கீழ் இடம் வைத்துள்ளவர்கள் வீடுகள் கட்ட விண்ணப்பித்தால், அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. மேலும், முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பல பணக்காரர்கள் கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், சாதாரண மக்கள் கட்டிய கட்டிடங்களுக்கும் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, அவர்களுக்கு அனுமதி வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில், பாம்பேகேசில் பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். சிறிய மழை பெய்தாலும் மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மழைநீர் வழிந்து செல்ல ஏற்றவாறு கால்வாய்கள் அமைக்க வேண்டும்.

தம்பி இஸ்மாயில் (திமுக): காந்தல் உருது பள்ளியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அந்த தடுப்புககளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் (காங்.) : ரோஜா பூங்கா செல்லும் சாலை நுழைவு வாயில் பகுதிகளில் விபத்துகள் ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். ஆர்.கே.புரம் பகுதியில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை சீரமைத்து தண்ணீர் கிரீன்பீல்டு பகுதிக்கு முறையாக வர நடவடிக்ைக எடுக்க வேண்டும். ரவி (திமுக): எனது வார்டிற்குட்பட்ட எல்க்ஹில் பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும்.

அபுதாகீர் (திமுக): நகரில் அனைத்து பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதேபோல், தோடர் பழங்குடியின மக்களின் எருமைகள் அனைத்து சாலைகளிலும் தற்போது கூட்டம் கூட்டமாக வலம் வருகிறது. எனவே, இவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலேட்டர் அவுஸ் பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சீரமைத்து துர்நாற்றம் வீசாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலட்சுமி (அதிமுக): எனது வார்டில் பல்வேறு பகுதிகளிலும் செடிகள் வளர்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் கால்வாய்களை தூர் வார வேண்டும்.

கீதா (திமுக): நான் எனது வார்டு பிரச்னை குறித்து பேச பொறியாளரிடம் பேசும்போது, மரியாதை குறைவாக பேசுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் மக்கள் பிரச்னை பேசுவதற்காகவே வந்துள்ளோம். எனவே, அதிகாரிகள் மக்கள் பிரச்னைகளை பேச வரும் கவுன்சிலர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். எனது வார்டில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

நாகமணி (திமுக): நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை வரையறை செய்ய வேண்டும். ஆர்.சி. காலனிக்கு முறையாக குடிநீர் வழங்க குழாய்கள் மாற்றித்தர வேண்டும். மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

விசாலாட்சி (திமுக): எனது வார்டிற்குட்பட்ட வெஸ்டோடா சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அச்சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.
மேரிபுளோரினா (திமுக): எனது வார்டில் முறையாக குப்பைகள் எடுக்க ஆட்கள் வருவதில்லை. முறையாக குப்பைகள் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் முறையாக வழங்க வேண்டும்.

செல்வராஜ் (திமுக): எச்எம்டி – பாம்பே கேசில் சாலையை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும். நொண்டிமேடு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடாமல் இருக்க நடவடக்கை எடுக்க வேண்டும்.

விஷ்ணுகுமார் (திமுக): எனது வார்டிற்கு முறையாக குப்பைகள் எடுக்க வராத நிலையில், சாலை மற்றும் நடைபாதைகளில் பொதுமக்கள் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனை எருமைகள் மற்றும் குதிரைகள் உட்கொள்ள வரும் போது, சாலை முழுக்க இழுத்து போட்டு விட்டு சென்று விடுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, முறையாக குப்பைகளை எடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஜேந்திரன் (திமுக): எனது வார்டிற்குட்பட்ட வேலிவியூ பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இப்பகுதியில் இதுவரை முறையாக மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படவில்ைல.

இதனால், மழைக்காலங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, இப்பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

The post நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் வீடுகள் கட்ட விண்ணப்பித்து காத்திருக்கின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: