மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே 2 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு குடைச்சல் தரும் வகையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் இம்மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை மற்றும் தபோலி உட்பட 7 இடங்களில் உள்ள  வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது.

கடந்த மார்ச் மாதம் அனில் பரப்புக்கு நெருக்கமாக நபர்கள், அரசு ஊழியர் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துரை சோதனை நடத்தியது. மும்பை, புனே, சாங்கிலி, ரத்னகிரி உட்பட 26 இடங்களில் இவை நடந்தன. அப்போது, அனில் பரப்புக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவரும், சிவசேனா தலைவர் ராம்தாஸ் கதமின் சகோதரரும், மும்பையில் உள்ள கேபிள் ஆபரேட்டருமான சதானந்த் கதம், துணை ஆர்டிஓ பஜ்ரங் கர்மதே ஆகியோரிடம் இருந்து ரூ.66 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளாகும் 3வது அமைச்சர் இவர் என்பது  குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே, அமைச்சர்களாக இருந்தபோது அனில் தேஷ்முக், நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில்  தள்ளியது. இந்த வரிசையில் அனில் பரப்பும் விரைவில் கைது செய்யப்படுவார் என கருதப்படுகிறது. இதேபோல், தேசிய விளையாட்டு போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஜார்கண்ட் அமைச்சர் பந்து டிர்க்கி வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

Related Stories: