பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையர் குமரகுருபரன் அதிரடி

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் கடந்தாண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ பெண்களை கோயில் நிர்வாகம் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் சேகர்பாபு, பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்களை கோயிலுக்கு அழைத்து வந்து உணவளித்தார். மேலும், அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த சம்பவம் அடங்குவதற்குள், கோயில் நிர்வாகத்தினர் தங்களுக்கு வேண்டியவர்களை சேரில் அமர வைத்தும், சிலரை தரையில் அமர வைத்தும் அன்னதானம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, கோயில் நிர்வாக மேலாளர் சந்தானம் மீது புகார் வந்தது. அதன்படி, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 9 பேர் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கோயில் மேலாளர் சந்தானத்தை அழைத்து இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். மேலும், கோயிலுக்கு அன்னதானத்தில் அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என கண்டித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு புகார் சென்றது. அதன்பேரில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் விசாரணை நடத்தினார். இதில் அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி என்பவரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் அன்னதான திட்ட பயனாளிகளுக்கு மேஜையில் உணவு பரிமாறிய நிலையில், 9 பயனாளிகளை மட்டும் தரையில் அமர்த்தி உணவு பரிமாறியது அன்னதான திட்ட நடைமுறைகளுக்கும் துறையின் வழிகாட்டுதல்களுக்கும் மாறாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொண்டதற்காக செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகியோர் 24.5.2022 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: