மாவட்ட செயலாளர்கள் 3 பேர் அதிரடி நீக்கம்: வைகோ நடவடிக்கை

சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் 3 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக நிர்வாகிகள் புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம்,  டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தாயகத்தில் கடந்த 11ம்தேதி காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும், அதில் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

மூவரும் விளக்கம் அளிக்காமல் 7 மற்றும் 9ம்தேதி தேதியிட்ட கடிதங்களை எனக்கு அனுப்பி உள்ளனர். அதிலும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புகார்களுக்கு உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு  தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இந்த  மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள்  உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய்ந்தது.

அதனடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள பரிந்துரை மற்றும் சட்டதிட்ட விதிகளின்படி இந்த மூவரையும் மதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முகசுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.

Related Stories: