திமுகவை விமர்சிக்காமல் இங்கு அரசியல் செய்ய முடியாது அதிமுக ஆட்சியில் நல்ல ஓட்டு இப்போ கள்ள ஓட்டு என்பதா? நயினார், விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி

கோவை: திமுகவை விமர்ச்சிக்காமல் இங்கு அரசியல் செய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் நல்ல ஓட்டா தெரிந்தது, இப்போது கள்ள ஓட்டா தெரிகிறதா என நயினார், விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து உள்ளார். கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் கள்ள ஓட்டுக்கள்தான் நீக்கப்பட்டு இருக்கிறது என நயினார் நாகேந்திரன் கூறி உள்ளாரே என நிருபர்கள கேள்வி எழுப்பினர்.

அதற்கு செந்தில் பாலாஜி, ‘‘வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கொடுப்பது தேர்தல் ஆணையம்தான். பாஜவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இந்த கள்ள ஓட்டுக்கள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அப்போது நல்ல ஓட்டுக்களாக இருந்தது. இப்போது கள்ள ஓட்டுக்கள் ஆகிவிட்டதா? இதெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்தும் சொல்லி இருக்கின்றார்’’ என பதிலளித்தார்.

திமுகவை தீய சக்தி என விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, ‘‘பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும், திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழகத்தில் இருக்கிறது. விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். திமுகவை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். பா.ஜ, அதிமுக என எந்த கட்சியாக இருக்கட்டும் திமுகவை மட்டுமே குறை சொல்கின்றன. மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல்லரசு நடத்தும் இயக்கமாக திமுக இருக்கிறது.

யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அரசியல் தொடர்பான விமர்சனங்களை, அவர்களுடைய கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிமுகவும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என சொல்கின்றனர். மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் திமுக..2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை, யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை’’ என பதிலளித்தார்.

Related Stories: